தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு அதிகமாகவே இருந்தது. அக்டோபர் மாதம்16ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை ஆரம்பமான நிலையில் மோன்தா புயல் உருவானது.. அது சென்னையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 28ஆம் தேதி ஆந்திராவை நோக்கி நகர்ந்து அன்று இரவு காக்கிநாடாவுக்கு தெற்கே மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது.
அதன்பிறகு வங்கக்கடலில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.. இதில் நவம்பர் 14ஆம் தேதிவாக்கில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், நவம்பர் 19ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தத் தேதிகளையொட்டி தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது..
இந்நிலையில் இன்று தமிழகத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வரும் 12ஆம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.