தமிழ்நாடு

மழை வெள்ளத்தில் மிதக்கும் பணகுடி

மழை வெள்ளத்தில் மிதக்கும் பணகுடி

webteam

நெல்லை மாவட்டம் பணகுடியில் கனமழையால் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீரில் முழ்கியுள்ளன. மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்ததால் சிகிச்சை பெற்று வந்தவர்கள், மருத்துவர்களால் உடனடியாக மீட்கப்பட்டனர்.

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் பணகுடி நகர் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் தாழ்வான பகுதிகளை சூழ்ந்துள்ளது. அனுமான் நதியில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. அனுமான் நதியின் குறுக்கே உள்ள பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் பணகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டிக்கிறது. சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் இருந்த மருந்துகள், ரத்தம் பதப்படுத்தும் பிரிட்ஜ்கள் உள்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாயின.

பணகுடி பேருந்து நிலையம், காவல்நிலையம், கோயிலிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பணகுடி வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மேலும் ரோஸ்மியாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசு தனி கவனம் செலுத்தி மீட்பு மற்றும் பணிகளில் ஈடுபட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.