தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் நாளை, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தீபாவளி அன்று 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் எனறு குறிப்பிட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தீபாவளிக்கு மறுநாள் அதாவது வரும் அக்.21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கனமழையும், அக்.23ஆம் தேதி மிககனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆழ்கடல் மீனவர்கள் 21ஆம் தேதி காலைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா, “தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும். வடகிழக்குப் பருவமழை தற்போதுவரை இயல்பைவிட 58 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அக்.24 ஆம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என தெரிவித்தார்.
”சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை மேகங்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும், இடி மின்னல் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.