தென்மேற்கு அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நெல்லையில் 19 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 24 மில்லி மீட்டர் மழையும், திருப்பதிசரத்தில் 23 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தொடர்மழை காரணமாக திண்டுக்கல்லில் 14 மில்லி மீட்டர் மழையும், நிலக்கோட்டையில் 15 மில்லி மீட்டர் மழையும், பதிவாகியுள்ளது. அதேபோல் விருதுநகரில் 14 மில்லி மீட்டர் மழையும், தேனி, திருப்பூரில் 13 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. விடிய விடிய பெய்யும் மழையால் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கன மழை எதிரொலியால் விருதுநகர் மாவட்டம் கதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் பிரதோஷ வழிபாடு நடத்த வந்த பக்தர்கள் அதிகமானோர், மலையடிவாரத்தில் காத்திருக்கின்றனர்.