சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக பச்சப்பட்டி, அசோக்நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், வீடுகளிலும் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதாலும் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, மாநகரில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் நேற்று மாலை பெய்த கன மழையினால், சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள குமரகிரி ஏரி முழுவதும் நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக பச்சப்பட்டி, அசோக் நகர், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்த குளிர்சாதன பெட்டிகள், பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நீரில் மிதந்தன.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மற்ற ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ள போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் இது போன்ற பெரும் சேதத்தை தவிர்க்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர். வீடுகளில் தண்ணீர் தேங்கியதால் குழந்தைகளும், முதியோர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.