புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 5வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து வருகிறது. கடலோர மாவட்டமான காரைக்காலில் கடந்த 5 தினங்களாக தொடர்மழையாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனையடுத்து 5வது நாளாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன்காரணமாக 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த மீன் பிடித்துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து வெள்ள நீர் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் வழியாகத்தான் கடலில் கலக்கின்றது. ஆகவே டெல்டா மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்யத் தொடங்கியதால் அனைத்து ஆறுகளின் கரைகளையும் 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட நிர்வாகத்திற்கு புதுச்சேரி அரசு அறிவுருத்தியுள்ளது.