தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம். மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக்.29) ஒருநாள் விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். மட்டுமன்றி ஆற்றங்கரையோரம் வசிப்போர், தாழ்வான பகுதிகளில் குடியிருப்போர் , பழுதடைந்த வீட்டு கட்டடங்களில் வசிப்போர், பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டங்கள் மட்டுமன்றி நேற்று தொடங்கி தற்போது வரை தமிழகத்தின் பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

அந்தவகையில் சென்னையில் அம்பத்தூர், மதுரவாயல், பாடி, கொரட்டூர், வளசரவாக்கம், ராமாபுரம், ஆலப்பாக்கம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல், திருவேற்காடு, செம்பரம்பாக்கம், மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அருகே புதுப்பாளையம், சித்திலிங்கமடம், மெய்யூர், எடப்பாளையம் விக்கிரவாண்டி, மயிலம், முண்டியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான அப்பம்பட்டு, ஆனந்தபுரம், மேல்மலையனூர், களவாய், ஆலம்பூண்டி, அவலூர்பேட்டை ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் அடியக்கமங்கலம், தேவர்கண்டநல்லூர், விளமல், மடப்புரம், சேந்தமங்கலம், புலிவலம், குளிக்கரை, அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. செய்யாறு , அனக்காவூர், வடதண்டலம், பைங்கினர், தூளி, விண்ணவாடி சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்துவருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கிய கனமழை தற்போதும் தொடர்ந்து நீடித்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை எலவனாசூர்கோட்டை செங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தீபாவளித் திருநாளை முன்னிட்டு புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க திருச்சியின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் வராததால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு மழை காரணமாக தரைக்கடை வியாபாரிகள் கடை அமைக்காமல் உள்ளனர். இதனால் தீபாவளி கடைசிநேர விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோவில்பட்டி கயத்தாறு மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக அரியலூர், ஜெயங்கொண்டம், திருமானூர், உடையார்பாளையம், விக்கிரமங்கலம், செந்துறை ஆகிய சுற்று வட்டாரபகுதிகளில் மழை பெய்துவருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்துவருகிறது.

தமிழகம் மட்டுமன்றி, புதுச்சேரியிலும் இன்று காலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பரவலாக மழை பெய்து வருகின்றது.