நாகப்பட்டினத்தில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 2 ஆம் தேதி பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரை நம்பி நாகை மாவட்டம் சீர்காழி உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், பாசன வாய்க்கால்கள் புதர் மண்டி காணப்படுவதாகவும் இதனால் கடைமடைக்கு நீர் வரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்திருந்தனர். நெற்பயிர்கள் கருகுவதற்குகள், தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திருக்குவளை, சிக்கல், மேலபிடாகை, வலிவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மேட்டூர் அணை நீர் கடைமடை மாவட்டமான நாகைக்கு வந்துசேராத நிலையில் கனமழை கொட்டி தீர்த்தது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.