சென்னையில் கனமழையால் 1212 புகார்கள் வந்த நிலையில், தண்ணீர் தேங்கல், மரங்கள் சரிவு, தெருவிளக்குகள் பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி ஆணையர் பொதுமக்கள் மழை நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
இலங்கையொட்டிய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் சென்னை உட்பட திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில் விடியவிடிய கனமழை கொட்டித்தீர்த்தது. விடியவிடிய கனமழை பெய்தபிறகும் மழை தொடர்ந்துவருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னையில் வடபழனி, சைதாப்பேட்டை, மீனம்பாக்கத்தில் 12 செமீ-க்கு மேல் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. வடபழனியில் அதிகபட்சமாக 13.5 செமீ மழையும், சைதாப்பேட்டையில் 12.7 செமீ மழையும், மீனம்பாக்கத்தில் 12 செ.மீ மழையும் பதிவாகின. அதேபோல மடிப்பாக்கம் 11.6 செமீ, மதுரவாயல் 11.4 செமீ, வளசரவாக்கம் 11.3 செமீ, நெற்குன்றம் 11 செமீ, நுங்கம்பாக்கம் 10 செ.மீ, அடையாறு 10 செ.மீ மழை என பதிவாகியுள்ளது.
இந்தசூழலில் தான் சென்னையில் நிலவரம் எப்படி இருக்கிறது, என்ன புகார்கள் வந்தன? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், சூப்பர் எல் நினோவால் பல முக்கிய அறிவுறுத்தல்கள் மாநில அளவில் கொடுக்கப்பட்டுள்ளன. அதிகவெப்பம் பதிவாகியிருப்பதால் அதன்காரணமாக அதிகமழை பொழிவு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது ஒரே நாளில், 24 மணி நேரமோ 48 மணிநேரமோ தொடர்ந்து மழை நீடித்தால் சமாளிப்பது சவாலானது. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1212 புகார்கள் வந்துள்ளன, அதில் பெரும்பாலானவை தண்ணீர் தேங்கியது, மரங்கள் சரிந்தது, தெருவிளக்குகள் எரியவில்லை என்பதுதான். தண்ணீர் பெரும்பால இடங்களில் வெளியேற்றப்பட்டுள்ளன, மரங்கள் அகற்றப்பட்டுள்ளது, தெருவிளக்குகள் விரைவில் சரிசெய்யப்பட நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதிக மழை அல்லது அதீத மழை இருக்க வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். தேவையில்லாமல் மழை நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும்” என பேசியுள்ளார்.