செங்கல்பட்டில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை முதல் மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அருகில் உள்ள நீர் நிலைகள் முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு நகர பகுதியில் உள்ள அண்ணா நகர், சக்தி நகர், பழனி பாபா நகர், ஆண்டாள் நகர், ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனை கண்ட வாகன உரிமையாளர்கள் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஒரு சில வாகனங்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு சில பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.