தமிழ்நாடு

'7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்' - சென்னை வானிலை ஆய்வு மையம்

kaleelrahman

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடலோர பகுதிகளில் சுமார் 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 7 ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, சேலம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வருகிற 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளி காற்று வீசும் என்பதால் மத்திய மேற்கு வங்கக்கடல், கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.