தமிழ்நாடு

15 மற்றும் 1‌6 தேதிகளில் வடதமி‌ழகத்தில் கனமழை

15 மற்றும் 1‌6 தேதிகளில் வடதமி‌ழகத்தில் கனமழை

webteam

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கஜா புயலுக்குப் பின் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. வட மாவட்டங்களை பொறுத்தவரை வறண்ட வானிலையே காணப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்‌பெற்றுள்ளது. இது சென்னையிலிருந்து ஆயிரத்து 170 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. 

இது அடுத்து புயலாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 15 மற்றும் 1‌6ஆம் தேதிகளில் வடதமி‌ழகத்தின் கடலோர மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

மீனவர்கள் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நாளை புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் எண்ணூர், நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது