தமிழ்நாடு

தஞ்சை, விருதுநகர், திருவண்ணாமலையில் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை, விருதுநகர், திருவண்ணாமலையில் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

webteam

தஞ்சை, விருதுநகர், திருவண்ணாமலையில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் போதிய மழையில்லாததால் மக்கள் மற்றும் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் அண்மைக்காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்படுகிறது. அந்த வகையில் இன்று, தஞ்சை மாவட்டத்தில் மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தஞ்சையின் நாஞ்சிக்கோட்டை, திருவையாறு, வல்லம், திருக்காட்டுப்பள்ளி, அம்மாபேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை குறுவை சாகுபடிக்கு பயனளிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் இன்று காலை முதல் மாலை வரை அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் காய்ந்து கொண்டிருந்தது. மாலை ஆறரை மணி அளவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு இந்த மழை உயிர் கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தின் சத்ரெட்டியபட்டி, பாண்டியன் நகர், சூலக்கரை, அல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் இடியுடன் கனமழை பெய்தது. சுமார் 1 மணிநேரமாக பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பக்காற்று நீங்கி குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.