வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கரையைத் தொடாமல் காற்றின் காரணமாக திசை மாறி கடலிலேயே அதிக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் சில மாவட்டங்களில் மக்கள் அவதிக்குள்ளாகினர். ஆறுகள், ஏறிகளில் தண்ணீர் பெருகியுள்ள போதிலும், பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. இந்நிலையில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை மட்டுமே பெய்தது.
இதுதொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் விளக்கமளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “கடலில் உருவான மேகங்கள் அனைத்தும் கரையை நெருங்கும் இடத்தில் திசைமாறித் திரும்பிச்சென்றுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் கடலில் கனமழை பெய்துள்ளது. இதேபோன்று கடலில் உருவான அனைத்து மேகங்களும் திசை மாறி சென்று கடலிலேயே மழையாக பொழிந்துவிட்டு, கரைப்பகுதியில் சிறிதளவு மழையை மட்டுமே பொழிந்துள்ளது” என்றார்.