ஆம்பூர் அருகே பெய்த கனமழை காரணமாக, சாலையில் ஓடிய மழைநீருடன், கழிவுநீரும் வீட்டில் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததுள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததுள்ளது. அத்துடன் சாலையில் ஓடிய மழைநீருடன் கழிவுநீரும் வீட்டில் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக பெய்த மழையால், கடை மற்றும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழிவு இருந்தபோதும் கோபிசெட்டிபாளையம் பகுதியில் போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்திருந்தனர். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான நம்பியூர், டி.என்.பாளையம், கவுந்தப்பாடி, வெள்ளாங்கோயில் உட்பட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.