தமிழ்நாடு

5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

webteam

தமிழகம் - கேரளாவை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னையில் கிண்டி, அடையாறு, திருவான்மியூர், தேனாம்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், மயிலாப்பூர், தரமணி, வேளச்சேரி, தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் பெய்த மழை காலை வரை நீடித்தது. புதுக்கோட்டையில் உள்ள கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, கந்தர்வகோட்டை, அன்னவாசல், சித்தன்னவாசல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதேபோன்று மேலும் பல பகுதிகளில் மழை பெய்தது.

இந்நிலையில், இன்று சென்னையில்‌ செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன், தமிழகம் - கேரளாவை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, சேலம், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் கடலூர், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் 8 சென்டி மீட்டர் மழை பெய்ததாக கூறினார். திருவாரூர் மாவட்டம் குடவாசல், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 7 சென்டி மீட்டர் மழைப்பொழிவும் பதிவாகியுள்ளதாக புவியரசன் தெரிவித்தார். 

தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 43 சென்டி மீட்டர் மழை பெய்திருப்பதாகவும், இது வழக்கத்தை விட 5 சதவிகிதம் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். புதுச்சேரியிலும், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு மழைப்பொழிவும் குறைந்திருப்பதாக புவியரசன் பட்டியலிட்டார்.