தமிழ்நாடு

கண்மாய் உடைந்து பேருந்து பணிமனைக்குள் வெள்ளம்!

webteam

விருதுநகரில் பெய்த கனமழையால் கண்மாய் உடைந்து பேருந்து பணிமனைக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.

விருதுநகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சத்திர ரெட்டியாபட்டி கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அதன் கரை உடைந்தது.

இதில் வெளியான வெள்ள நீர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் புகுந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. பணிமனையில் இருந்த பங்க்கில் 12 ஆயிரம் லிட்டர் டீசல் வீணானது. மேலும் 80 பேருந்துகள் நீரில் மூழ்கிய நிலையில் உள்ளது. அலுவலகத்திற்குள்ளும் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதுபற்றி போக்குவரத்து ஊழியர் ரவிக்குமார் என்பவர் கூறும்போது, ’பணிமனையில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது’ என்றார். 

கண்மாய் உடைப்பால் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் என்பதால், கரையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.