தமிழ்நாடு

கருணாநிதியை காண குடும்ப உறுப்பினர்கள் வருகை - மருத்துவமனைக்கு கூடுதல் போலீஸ் வரவழைப்பு

கருணாநிதியை காண குடும்ப உறுப்பினர்கள் வருகை - மருத்துவமனைக்கு கூடுதல் போலீஸ் வரவழைப்பு

webteam

‌திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள போதும், அவரை காண தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். 

உடல்நிலையில் நலிவு ஏற்பட்டதை அடுத்து, காவேரி மருத்துமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் குழு கருணாநிதியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது கருணாநிதி உடல் நலத்துடன் உள்ளார் என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரை காண ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

தொண்டர்கள் குவிந்து வருவதால் காவேரி மருத்துவமனை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் போலீசாரும் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் பேரக்குழந்தைகள் உட்பட அவரது உறவினர்கள் வருகை  தந்துள்ளனர். கருணாநிதியின் உடல் நலம் குறித்து இன்னும் சற்று நேரத்தில் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சேலத்தில் நாளை நடைபெறவிருந்த அரசு விழாவை ரத்து செய்துவிட்டு முதலமைச்சர் பழனிசாமி சென்னை திரும்பி வருகிறார். இரவு ஒரு மணியளவில் முதலமைச்சர் காவேரி மருத்துவமனைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  கருணாநிதியின் வீட்டிற்கு செல்லும் வழிகள் அனைத்தும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், போலீசார் அனைவரும் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.