தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், இன்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது சட்டமன்றப் பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, உரிமை மீறல் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து அவையில் பேச அதிமுக தரப்பில் கோரப்பட்டது.
அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காத காரணத்தால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.
இந்தசூழலில் தான், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றுகையில், இந்து அறநிலையத் துறை குறித்துப் பேசிய அவர், “அறநிலையத்துறையின் சொத்துக்கள் கோவில் பணிகளுக்கே பயன்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் கூறியிருக்கிறார்கள். இது, வலதுசாரி பாஜகவின் நோக்கமும் இதுதான். அதைதான் தவெகவும் பிரதிபலிக்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு, பதிலளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அறநிலையத்துறையின் வருமானம் கோவில்களுக்காக, கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்காக செலவிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டப்படுவது தொடர்பான தொடங்கப்படாத பணிகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. நாம் ஆராய்ந்த வரையில், பக்தர்களுக்கான கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தபடாமல் இருந்திருக்கிறது. எனவே, பல நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக அந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறது.
கோயில்களில் கடந்த ஆட்சியில் வணிக நோக்கத்தில் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 500 பேர் வரக்கூடிய கோயிலுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் ஏன்? கோயில் நிதியை கமர்சியலாக பயன்படுத்தியது ஏன்? கோவில்களை கமெர்சியலாக பயன்படுத்துவதற்கு எதிராக தான் அந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயம், மக்களும் கோவில்களும் பயன்படும் வகையில், மாற்றுத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறது எனப் பேசினார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து அறசமயநிலைத் துறை கொடைகள் என ஒரு சட்டம் இருக்கிறது. அதில், விதி 69-ல் குறிப்பிபிடப்பட்டுள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. நான் மட்டும் முடிவு செய்து திட்டங்களை கொண்டு வந்தது போல, ரமேஷ் பேசியிருக்கிறார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் படியே, திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதேபோல, ஆய்வின் அடிப்படையில் தான் மல்டி லெவல் பார்க்கிங் ஏற்படுத்தப்பட்டது” என விளக்கமளித்தார்.
தொடர்ந்து, சேகர்பாபுவுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், குன்னூர் விநாயகர் கோவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பதற்கு, ஏற்கனவே நகராட்சி நிர்வாகத்திடம் நிலத்தைக் கொடுத்து அதிலிருந்து வரும் நிதியை கோவில்களுக்கு அடிப்படை வசதிகளை பயன்படுத்தலாம். ஆனால், கோவில் நிதி 10 கோடியை எடுத்து மல்டி லெவல் கார் பார்க்கிங் பொதுமக்கள் கேட்கவில்லை. பக்தர்கள் கேட்பது அடிப்படை வசதிகளை தான் என விளக்கமளித்தார்.
தொடர்ந்து, ரமேஷின் விளக்கத்திற்கு கேள்வி எழுப்ப முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முயன்ற நிலையில், அதற்கு அனுமதி மறுத்த சபநாயகர் ஜே.டி.சி. பிரபாகர். சேகர்பாபுவின் கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்து விட்டதாகவும் திரும்ப சேகர்பாபுவை பேச அனுமதிக்க முடியாது என்ற வகையில் பேசினார். இதனால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.