தமிழ்நாடு

'சிமி' அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்படுமா? - தொடங்கியது நீதிபதி விசாரணை

'சிமி' அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்படுமா? - தொடங்கியது நீதிபதி விசாரணை

webteam

‘சிமி’ அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு குறித்த தீர்ப்பாயத்தின் மூன்று நாள் விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையில் குன்னூரி்ல் இன்று துவங்கியது. 

'சிமி' எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு, 1977ல் துவங்கப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டதை அடுத்து கடந்த 2001 ஆம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அப்போது முதலே இந்த அமைப்பு மீதான தடை அவ்வப்போது வரை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக 2014 ஆம் ஆண்டு ஐந்தாண்டு தடை நீட்டிப்பு வழங்கப்பட்டது. அந்த தடை உத்தரவு கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. 

இதையடுத்து 'சிமி' அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்படுமா என்பது குறித்த விசாரணையை குன்னூரில் இன்று நடைபெற்றது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயத்தில் நடைபெற்ற இந்த விசாரணை கூட்டத்தில், குஜராத், ஜார்கண்ட், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த குற்றப்பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு, மாநில உளவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

அப்போது 'சிமி' அமைப்பினர் மீது, ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர்கள் மீதான தடை விலக்கப்பட்டால், பல தேச விரோத செயல்களில் அவர்கள் ஈடுபடும் அபாயம் உள்ளதாகவும், தீர்ப்பாயத்தில் விளக்கம் அளித்தனர். மேலும் 6 மனுக்கல் பெறப்பட்டு, அது குறித்து விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து நாளை இரண்டாம் நாள் விசாரணை நடைபெறவுள்ளது.