8 ஆண்டுகளாக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு நிர்வாக ரீதியில் சில மாற்றங்களை செய்துள்ளது. அந்த வகையில், 8 ஆண்டுகளாக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஹோமியோபதியில் ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பத்திரப்பதிவு ஐ.ஜியாக இருந்த குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஹரிகரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராக நியமனம் செய்யபட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி நாகராஜனுக்கு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த், திருவாரூர் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், பதிவுத்துறை ஐஜி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவ இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும் உடன்பட்டு சண்முகத்தின் கருத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஆதரவு தெரிவித்தனர். இதனால் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்படுவார் என பேசப்பட்டது.
இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனினும் தேர்தல் பணி காரணமாகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.