தமிழ்நாடு

மருத்துவமனையில் ஜெயலலிதா அதிகாரிகளுடன் பேசினார்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மருத்துவமனையில் ஜெயலலிதா அதிகாரிகளுடன் பேசினார்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

webteam

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய அரசு விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் பேசியதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு இந்த பதிலை ராதாகிருஷ்ணன் அளித்துள்ளார். இது தவிர நெருங்கியவர்களுடனும் ஜெயலலிதா பேசினார் என ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு ஜெயலலிதா உடல் நிலை ஓரளவு தேறியதாகவும் வாய் வழியாக உணவுகளையும் எடுத்துக்கொண்டார் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான முக்கிய அம்சங்களில் முன்னேற்றம் தென்பட்டதால் அதிதீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வேறொரு பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா ஆம்புலன்சில் ஏற்றப்படும் முன் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் அதன் தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்தது தெரியவந்ததாகவும் ராதாகிருஷ்ணன் தன் பதிலில் கூறியுள்ளார். இதன் பின் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜெயலலிதாவுக்கு நோய்த்தொற்று மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருந்ததாகவும் அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது. இது தவிர உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகளும் இருந்ததும் தெரியவந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சில அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டியது போல ஜெயலலிதா உடலில் எவ்வித காயங்களும் இல்லை என்பது அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையிலிருந்து தெரியவருவதாகவும் ராதாகிருஷ்ணன் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.