தமிழ்நாடு

அரசின் உத்தரவை மதிக்காத தலைமையாசிரியர் - மாணவர்கள் வளாகத்தை சுத்தம் செய்த அவலம்

webteam

ஓசூர் அருகே பள்ளி மாணவர்களை வைத்து பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியரின் செயல் அப்பகுதி மக்களை வருத்தமடையச் செய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தரப்பள்ளி அருகே உள்ள தொட்டமேட்டரை ஓசூர் தர்மபுரி சாலையில் அரசு துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இயங்கும் இந்த பள்ளியில் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் கையில் மண்வெட்டி, பாண்ட்லி, தொடப்பம், ஆகியவற்றை கொடுத்து பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள புற்களை தலைமை ஆசிரியர் கீதா சுத்தம் செய்ய வைத்துள்ளார்.

இதை அறிந்து செய்தியாளர்கள் அங்கு சென்று படம் பிடித்த உடன் தலைமை ஆசிரியர் கீதா, மாணவர்களை உடனடியாக உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினர். தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் பயில்வது தவிர மற்ற எந்த வேலையும் செய்ய வைக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையிலும் மாணவர்களை வைத்து பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைத்தது மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் கீதாவிடம் கேட்டபோது நம்ம ஊர் சூப்பர் விழுப்புணர்வு நிகழ்ச்சிக்காக செய்ய வைத்ததாக தெரிவித்தார்.