திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் தலைமை ஆசிரியர் தர்ணா போராட்டம் புகாரின் பேரில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை R.வெள்ளோடு அடுத்துள்ள அய்யம்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் தலைமை ஆசிரியையாக இந்திரா என்பவர் கடந்த மூன்று வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து இந்திரா பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் மணிவண்ணனிடம் விண்ணப்பித்திருந்தார் ஆனால் தலைமை ஆசிரியைக்கு பணியிட மாறுதல் வழங்க மறுத்து விட்டார்.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல்லில் நடைபெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் இந்திரா திடீரென தரையில் படுத்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அலுவலர்கள் அவரை சமாதானப்படுத்திய பின் தர்ணாவை கைவிட்டார்.
ஆனால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியை இந்திராவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் நேற்று தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இன்று திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்திரா, அலுவலகத்தின் உள்ளே தரையில் அமர்ந்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது தன்னை பணி நீக்கம் செய்ததை திரும்ப பெறும் வரை இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டேன் எனக் கூறி இந்திரா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைமையாசிரியை இந்திராவை விசாரணைக்காக மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.