கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துக் காட்டியதாக குற்றச்சாட்டு இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை வசதிகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்துவருகிறது. இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், மத்திய அரசு ஆக்சிஜன் ஒதுக்கீடு அளவை அதிகரித்திருப்பது குறித்தும், கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு மற்றும் செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்தும், கொரோனாவால் இறந்தவர்கள் அடக்கம் குறித்தும் கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதுதவிர தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதை ஏற்கமறுத்த நீதிபதிகள், கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துக் காட்டியதாக குற்றச்சாட்டு இல்லை என கூறியிருக்கின்றனர்.
மேலும், கொரோனா பாதித்தவர்கள், பலியானவர்களின் புள்ளி விவரங்களை வெளியிடுவது தவறில்லை எனவும், கொரோனா தடுப்பு குறித்து மாநில மற்றும் மத்திய அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.