தமிழ்நாடு

முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

webteam

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ‘தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு பங்கு உள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். விசாரணையின்போது, ’நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்த பணி கள் முதலமைச்சரின் நெருங்கிய உறவினர்களுக்கு விதிகளை மீறி, அதிக தொகைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது’ என்று வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் வாதிட்டார்.  ‘முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளதால் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ தெரிவித்தார். இருதர்ப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா,  இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும் ஒரு வாரத் தில் இதுதொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.