தமிழக அரசு, ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராமசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் தற்போது ஆட்சி அமைத்திருக்கும் திமுக அரசு, இந்திய அரசை "ஒன்றியம்" என்ற பெயரால் அழைத்து வருகிறது. ஆளும் திமுக கட்சியின் கீழ் சுமார் ஒன்றரை கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் பிரிவினைவாதத்தை உருவாக்கும் வகையில் இந்த செயல்பாடு அமைகிறது.
இதுகுறித்து விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இது தவறான முன்னுதாரணமாக அமைவதோடு, மற்றொரு ஜம்மு காஷ்மீர் போன்ற பிரிவினை ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும். திமுகவின் அமைச்சர்களும் ஒன்றியம் என்ற வார்த்தையையே பயன்படுத்தி வருகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக பாரதிய ஜனதாவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, தமிழக முதல்வர் மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுவது சமூக குற்றமில்லை என பதில் அளித்ததோடு தொடர்ச்சியாக ஒன்றிய அரசு என்றே அழைக்கவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது தேசிய ஒருமைப்பாட்டை பாதித்து பிரிவினை ஏற்பட காரணமாக அமைந்துவிடும். ஆகவே தமிழக தலைமைச் செயலரின் அலுவல் ரீதியான அறிவிப்புகள், நிகழ்த்தப்படும் உரைகள் போன்ற எல்லாவற்றிலும் ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும். மேலும் தமிழக அரசின் அலுவல் ரீதியான உரைகள் மற்றும் அறிவிப்புகள், ஆணைகள் போன்றவற்றில் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில் அழைக்க அறிவுறுத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், " இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா அல்லது பாரதம் என்ற இரண்டு வார்த்தைகளே உள்ளன. அவ்வாறு இருக்கையில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது" எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள் கொரோனா தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்வதையே கட்டாயப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இருக்கையில் இப்படித்தான் பேசவேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், "சட்டமன்றத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது முதலமைச்சர் ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை. அவ்வாறே தொடர்ந்து அழைக்கப்படும் என தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து நீதிபதிகள், ’’மனுதாரர் கோரும் வகையில் முதல்வரும், அமைச்சர்களும் இவ்வாறுதான் பேசவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது. மனுதாரர் தமிழக மக்களுக்கு எதனைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறார் எனத் தெரியவில்லை. மனுதாரர் கோரும் வகையில் உத்தரவிட முடியாது’’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.