தமிழ்நாடு

லிங்கம் பற்றி சர்ச்சை பேச்சு: வெளிநாடு தப்பினாரா நித்யானந்தா?

லிங்கம் பற்றி சர்ச்சை பேச்சு: வெளிநாடு தப்பினாரா நித்யானந்தா?

webteam

ஜலகண்டேசுவரர் ஆலய மூலவர் லிங்கம் தன்னிடம் இருப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நித்யானந்தா, வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தியானப் பயிற்சி, ஆன்மீக சொற்பொழிவு, சீடர்களுடனான சந்திப்பு என எப்போதும் பிசியாக இருந்த நித்யானந்தா, கடந்த ஒரு வருடமாக பக்தர்களை சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வாரம்தோறும் யூடியூப் வாயிலாக ஆன்மீக சொற்பொழிவாற்றி வந்தார். அண்மையில் அவர் பேசிய விவகாரம் ஒன்று சர்ச்சையாக‌, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதியில் உள்ள ஜலகண்டேசுவரர் ஆலய மூலவர் லிங்கம் தன்னிடம் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இதுதொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அதுகுறித்த தன்னிலை விளக்கத்தையும் யூடியூப் வாயிலாகவே தெரிவித்தார் நித்யானந்தா. மூலவர் லிங்க விவகாரத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில்,‌ அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு போலி பாஸ்போர்ட் வாங்க பல கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக விளக்கம் கேட்க பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரம நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.