தமிழ்நாடு

ஆலங்குளம் தொகுதியில் திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் ஹரி நாடார்

kaleelrahman

ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் திராவிட கட்சிகளுக்கு சவாலாக அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

பனங்காட்டு படை கட்சி சார்பாக சுயேச்சையாக ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டவர் ஹரி நாடார். அவர் சார்ந்துள்ள சமுதாயத்தின் நலனுக்காக தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த நிலையில் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக களம்கண்டார். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்த ஹரிநாடார் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். பெரிய அரசியல் கட்சிகளுக்கு இணையாக ராமநாதபுரத்தில் தனது கட்சியின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள ஹெலிகாப்டரில் சென்றார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹரி நாடார் போட்டியிட்ட ஆலங்குளம் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிமுக, திமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறார்.

ஆலங்குளம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் அதிமுகவின் பவுல் மனோஜ் பாண்டியன் 33,973 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட பூங்கோதை ஆலடி அருணா 31,075 வாக்குகளும் பெற்றிருக்கும் நிலையில் சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் 26,707 வாக்குகள் பெற்று திராவிட கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறார்.