கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.400 கோடியாக உயர்ந்துள்ளது என நெசவாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் செயல்பட்டுவரும் சுமார் 1200 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். நெசவாளர்களுக்கு சீரான வேலைவாய்ப்பை வழங்கும் பொருட்டும், மக்களிடையே கைத்தறி ரகங்கள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், கைத்தறி உற்பத்தி ரகங்களுக்கு சாதாரண நாட்களில் 20 சதவிகிதமும், பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற விழா காலங்களில் 30 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த தள்ளுபடிக்கான மானியத்தை 2014ம் ஆண்டு முதல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்கவில்லை என கூட்டுறவு சங்கங்கள் கூறுகின்றன. இந்நிலையில் தற்போது கைத்தறி ரகங்களுக்கும் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளதால் உற்பத்தி செய்யப்பட்ட குறைந்த அளவு துணிகளும் விற்பனையாகமல் தேக்கமடைந்திருப்பதாக நெசவாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.