தமிழ்நாடு

“உதவி செய்யவில்லை என்றாலும் பராவாயில்லை... கணக்கு காட்டாதீர்கள்” - மாற்றுத்திறனாளி வேதனை

“உதவி செய்யவில்லை என்றாலும் பராவாயில்லை... கணக்கு காட்டாதீர்கள்” - மாற்றுத்திறனாளி வேதனை

webteam

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாத காலத்திற்கு என்று கூறி மிகவும் சொற்ப அளவிலான உணவுப்பொருட்களை அதிகாரிகள் வழங்குவதாக மதுரை சோழங்குருனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் சாமானியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மாநில அரசுகள்  ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் சாமானியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசின் திட்டம் சரியானதுதான் எனவும் அதை நடைமுறைப்படுத்தும் வகைதான் சரியல்ல எனவும் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அரைகிலோ சர்க்கரை, அரைகிலோ பருப்பு, சொற்ப காய்கறிகள் கொடுத்துள்ளனர். இதை வைத்து ஒரு மாதத்திற்கு என் குடும்பத்தை எந்த கஷ்டமும் இல்லாமல் நடத்தலாம் என்று யார் சொன்னது. சத்தியமாக தமிழக அரசின் திட்டம் சரியானதே. ஆனால் முறையாக நடைமுறைபடுத்துகிறார்களா என்பதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது. எங்களுக்கு நிவாரண உதவி தரவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் தந்த மாதிரி எங்களை அசிங்கப்படுத்துற மாதிரி கணக்கு காண்பிக்காதீர்கள். டிவியில் எங்களுக்கு உதவி செய்வது போன்று காண்பித்து ஏமாற்றாதீர்கள். கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.