செய்தியாளர்: இ.சகாய பிரதீபா
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "உலக அளவில் தங்கம் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. வருடத்திற்கு 600 டன் தங்கம் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு 2018 ஆம் ஆண்டு மத்திய அரசினால் கொண்டுவரப்பட்ட தங்க நகை தரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தங்க நகையில் ஹால்மார்க் முத்திரை பொறிப்பது கட்டாயமாக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு முதல் 2 கிராம் அல்லது அதற்கும் மேற்பட்ட எடை கொண்ட தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரையுடன், HUID எண்கள் பொறிக்கப்பட வேண்டும் என சட்டம் கொண்டு வரபட்டது. HUID எண் என்பது மனிதர்களுக்கு வழங்கப்படும் ஆதார் எண்களை போல தங்க நகைகளுக்கு வழங்கபடும் பிரத்தியேக எண்கள் ஆகும். இந்த HUID எண்களை வைத்து BIS CARE என்ற மொபைல் செயலியில் வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்க நகையின் தரம் உட்பட அனைத்து தரவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டம் இந்தியாவில் உள்ள 803 மாவட்டங்களில் 343 மாவட்டங்களில் மட்டுமே கட்டாயமாக்கபட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 25 மாநிலங்களில் மட்டுமே கட்டாய ஹால்மார்க் நடைமுறையில் உள்ளது. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், லடாக், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு, தாதர் மற்றும் நாகா ஹவாலி, மற்றும் லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் கட்டாய ஹால்மார்கிங் சட்டம் நடைமுறை படுத்தப்படவில்லை.
இதே போல தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் கட்டாய ஹால்மார்க்கிங் சட்டம் செயல்பாட்டில் இல்லை. இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திற்கும் எதிரானது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளுக்கு பல லட்சம் கோடி ருபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நுகர்வோரின் பணம் சுரண்டப்படுகிறது. எனவே தங்க நகைகளை விற்பனை செய்யும் போது வாடிக்கையாளர்களிடம் கொடுக்கப்படும் GST பில்லில் நகைகளில் அச்சிடப்பட்ட HUID எண்களை கண்டிப்பாக பிரிண்ட் செய்வதை கட்டாயமாக்கபட வேண்டும்.
அதனை போல் BISA CARE மொபைல் அப்பிளிகேசனில் HUID எண்களை அடித்து பார்க்கும் போது நகை விற்பனையாளரின் பெயர் மற்றும் GST பில்லில் உள்ள INVOICE எண் மற்றும் விற்பனை செய்த தேதியை குறிப்பிட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஹால்மார்க்கிங் முறையை கட்டாயமாக்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, "இந்தியாவில் 803 மாவட்டங்கள் உள்ள நிலையில் 343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க்கை கட்டாயமாக்கியது ஏன்? இதனால் மற்ற மாவட்டங்களில் முறைகேடு நடக்காதா? என கேள்வி எழுப்பினர். மேலும், மத்திய அரசு தரப்பில் இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.