தமிழ்நாடு

பாதி வழியில் விடப்பட்ட கர்நாடக பழங்குடியினர் - உணவு கொடுத்து பசியாற்றிய தமிழக மக்கள்

பாதி வழியில் விடப்பட்ட கர்நாடக பழங்குடியினர் - உணவு கொடுத்து பசியாற்றிய தமிழக மக்கள்

webteam

கர்நாடகவிற்கு லாரி மூலம் அனுப்பி வைத்த பழங்குடியினரை, ஓட்டுநர்பாதி வழியில் இறக்கிவிட்டதால், செய்வதறியாது நின்ற அவர்களுக்கு தமிழக மக்கள் உணவு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு துறைகளில் வேலையின்மை பிரச்னை எழுந்துள்ளது. அந்த வகையில் பொள்ளாச்சி மலைப்பகுதியில் வேலைப்பார்த்து வந்த 72 பழங்குடியினரை, வேலையின்மை காரணமாக பொள்ளாச்சி வட்டாட்சியர் லாரி மூலம் கர்நாடகத்துக்கு அனுப்பி வைத்தார்.

லாரி சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை அருகே வந்த போது மலையில் லாரி ஏறாது எனக் கூறி ஓட்டுநர் பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். செய்வதறியாது நின்ற அவர்கள் சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகத்தில் சோர்வுடன் அமர்ந்திருந்தனர்.

அவர்களை பார்த்து மனமிறங்கிய அப்பகுதி மக்களும், வாகன ஓட்டுநர்களும் அவர்களுக்கு உதவ முன்வந்தனர். 75 பேருக்கும் சாப்பிட உணவு ஏற்பாடு செய்த அவர்கள், குழுவில் இருந்த குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் உள்ளிட்டவற்றையும் வழங்கினர். அதனைத்தொடர்ந்து இரவில் அங்கேயே தங்கிய அவர்களுக்கு காலை அம்மா உணவகம் மூலம் சிற்றுண்டி வழங்கி, தனி வாகனம் மூலம் கர்நாடகத்துக்கு அனுப்பி வைத்தனர். பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்ற ஓட்டுநர் குறித்து பொள்ளாச்சி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.