நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அங்கு சென்றார். போராட்டக்காரர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ‘ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதியளித்தது திமுகதான்’ என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியிருக்கிறாரே என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ’மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, என் மேல் எப்போதும் தனிபாசம் வைத்திருப்பவர். அடிக்கடி என்னை பற்றிப் பேசி, விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார். அண்ணா, ’வசவாளர்கள் வாழ்க’ என்று எப்போதும் சொல்வார். அதையே நானும் சொல்கிறேன். திமுக அனுமதியளித்தது, மீத்தேன் திட்டத்துக்குத்தான். அதுவும் ஆய்வுக்கான அனுமதி மட்டுமே. அதைச் செயல்படுத்த வேண்டியது மத்திய அரசுதான். அதில் என்னென்ன விளக்கங்கள் இருந்தது என்பது தெரியுமா? அதை அரசியல் ஞானி வைகோ முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்றார்.