தமிழ்நாடு

கர்ப்பிணியான பெண் காவலருக்கு பன்றிகாய்ச்சல் !

webteam

நெல்லையைச் சேர்ந்த போக்குவரத்து பெண் காவலர் அன்னலெட்சுமி என்ற எட்டுமாத கர்ப்பிணிக்கு பன்றிகாய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும் காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசிப்பவர் அன்னலெட்சுமி. இவர் நெல்லை மாநகர காவல்துறையில்  போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அன்னலெட்சுமி 13 ஆண்டுகளுக்கு பின் இப்போதுதான் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அன்னலெட்சுமிக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து பாளையங்கோட்டை தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்தமாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. 

இதனையடுத்து தனியார் மருத்துமனை நிர்வாகம் அன்னலெட்சுமியை அரசுமருத்துமனைக்கு உடனே கொண்டு போக சொல்லி அனுப்பி விட்டனர்.  தனிவார்டோ, மருந்தோ இல்லை எனக் கூறி மாத்திரைகளை மட்டுமே கொடுத்துவிட்டு  அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அன்னலெட்சுமியை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. 

தற்போது வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் காய்ச்சல் பரவும் அறிகுறி இருப்பதாகவும், அதனால் உடனே தமிழக அரசு முன்வந்து காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் அன்னலெட்சுமி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.