தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி தொடர்பான வீடியோவை ஹெச்.ராஜா வெளியிட்டதற்கு நெட்டிசன்கள் கேள்விமேல் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கும் நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கும் போது திமுக தலைவர் கருணாநிதி அமர்ந்திருப்பது போல் காட்சிகள் உள்ளன. இதே வீடியோவை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் பதிவேற்றம் செய்துள்ளார்.
ஹெச்.ராஜா பதிவேற்றம் செய்துள்ள மற்றொரு புகைப்படத்தில் முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதி நின்றுகொண்டிருப்பது போல் உள்ளது. கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் ஹெச்.ராஜா ட்விட்டில் கூறியுள்ளார். அதாவது தமிழ்த்தாய் வாழ்த்திற்கு நிற்காதது போலவும், தேசிய கீதத்திற்கு நிற்பது போலவும் அர்த்தப்படுத்துவது போல் இருந்தது.
ஹெச்.ராஜா கருணாநிதி வீடியோ வெளியிட்டுள்ளது குறித்து திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தொலைபேசி கூறுகையில், “திமுக தலைவர் கருணாநிதி 2009 க்கு பிறகு எந்த பொது நிகழ்ச்சியிலும் எழுந்து நிற்க இயலாத நிலையில் இருந்தார். நிற்க முடியாது என்பதற்கும் இயலாது என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவரா எச்.ராஜா” என்று தெரிவித்தார்.
திமுக பதிலளிப்பது ஒரு புறம் இருக்க, முடியாதவருக்கும், முடியாது என்பவருக்கு வித்தியாசம் தெரியவில்லையா என்று ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்திலே நெட்டிசன் கேள்வி மேல் கேள்விகளை கேட்டு வருகின்றனர். கலைஞரின் முதுமையை கருத்தில் கொண்டு அவர் மீது அன்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள இருந்து பல்வேறு விஷயங்களை கண்டறிந்து நெட்டிசன்களே பதிலளித்துள்ளனர். முதல் வீடியோவில் அன்பழகன் சிகப்பு தூண்டு போட்டிருக்கிறார், மற்றொரு போட்டோவில் பச்சை துண்டு போட்டிருக்கிறார், இரண்டு வேறுவேறு என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மட்டுமல்ல, தேசிய கீதத்திற்கும் கருணாநிதி எழுந்து நின்று இருக்கமாட்டார் என்றும் கூறியுள்ளனர். மேலும் ஒருத்தர் தவறு செய்ததை பற்றி பேசும் போது மற்றொருவர் தவறு செய்துள்ளதாக கூறி திசை திருப்புவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.