புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதியில் விநாயகர் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக கூறியதால் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் இந்த ஊர்வலம் சென்றது. அப்போது குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தடையையும் மீறி ஊர்வலம் சென்றது.
இதனிடையே நீதிமன்றம் மற்றும் காவல்துறையினர் குறித்து மோசமான கருத்துக்களை பயன்படுத்தியுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டவல்லுநர்களின் கருத்தை அரசு கேட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.