ஜிம் பயிற்சியாளர்.
ஜிம் பயிற்சியாளர். PT
தமிழ்நாடு

கொரட்டூர் சோகம்: ஜிம் பயிற்சியாளார் கழிவறை சென்ற சமயம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்

PT WEB

கொரட்டூரில் ஜிம் பயிற்சியாளர், பயிற்சியளித்துவிட்டு கழிவறைக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு கழிவறையிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணத்திற்கு பிறகு ஜிம் வருவதை கைவிட்ட அவர், வெகு நாட்கள் கழித்து ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி மேற்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு விரிவாக்கம் ஞானமூர்த்தி நகர் மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் யோகேஷ் (41). பாடி பில்டரான இவர் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் சுமார் 9-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்ட அவர், கடந்த 2022-ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் தனதாக்கியுள்ளார்.

மேலும் கடந்த 2021-ம் ஆண்டு வைஷ்ணவி (28) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்குப் பிறகு தீவிர பாடி பில்டிங்கில் இருந்து ஒதுங்கிய அவர் பல்வேறு ஜிம்களில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜிம்மியில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை ஜிம்மிற்கு வந்திருந்த வாலிபர்களுக்கு பயிற்சி அளித்த பிறகு வீட்டிற்கு செல்வதற்கு முன் மாலை 5.45 மணியளவில் கழிவறைக்கு சென்ற அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறி மயங்கி அங்கேயே விழுந்துள்ளார்.

இந்நிலையில் கழிவறைக்கு சென்றவர் வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உடன் பயிற்சி மேற்கொண்டவர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அங்கு அவர் மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் திருமணத்திற்கு பிறகு தீவிர பாடி பில்டிங்கில் ஈடுபடாத நிலையில் சம்பவத்தன்று அவர் அதிக அளவிலான எடைகளை தூக்கியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

யோகேஷுக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், அவர் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது யோகேஷின் குடும்பத்தாரிடமும், ஜிம் பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.