தமிழ்நாடு

குட்கா விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிஐ

குட்கா விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிஐ

webteam

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து குட்கா ஊழல் வழக்கு விசாரணையை சிபிஐ தொடங்கி உள்ளது.

தமிழக அரசியலில் புயலை கிளப்பிய குட்கா ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனையடுத்து விசாரணையை தொடங்கியுள்ள சிபிஐ, எம்.டி.எம். குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவின் வீடு, அலுவலகம் மற்றும் கிடங்கு உட்பட பல்வேறு இடங்களில் மீண்டும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. சிபிஐ-ன் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2016-ம் ஆண்டு மாதவ ராவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் டைரி மட்டுமல்லாது ஹார்ட் டிஸ்க், பென் ட்ரைவ் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டது தெரியவந்துள்ளது. அதில் மாதவ ராவிடம் இருந்து 44 கோடி ரூபாய் கையூட்டு பெற்றவர்களின் விவரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

குட்கா ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 17 பேரையும் விரைவில் விசாரிக்க உள்ளது சிபிஐ. விசாரணைக்கு ஆஜராகும்படி 17 பேருக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிபிஐ விசாரணையில் மாதவ ராவிடம் கையூட்டு பெற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் கோவை கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலைக்கும் மாதவ ராவுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்றும் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. கோவை குட்கா ஆலையின் உரிமையாளர் அமித் ஜெயின் தலைமறைவாக உள்ளார். அவர் கைது செய்யப்பட்டால் இந்த விவகாரத்தில் மேலும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது.