செய்தியாளர்கள் - மருதுபாண்டி மற்றும் முத்துப்பாண்டி
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மீது பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்கள் சமீபத்தில் சாதி மோதலை உண்டாக்கும் வகையிலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதாக 2 சிறுவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்து வெளியூருக்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் 2 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்கு திரும்பிவந்துள்ளனர். அப்போது முக்கூடலில் பானி பூரி கடையில் பானிபூரி வாங்கிவிட்டு சென்றுள்ளனர்.
இதனிடையே அவர்கள் வீட்டுக்குள் செல்வதற்குள் போலீசார் அங்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பானிபூரி கடைக்காரரான சக்திகுமார் தான் தங்கள் வருகையை போலீசாருக்கு தெரிவித்துள்ளார் என்று 2 சிறுவர்களும் கருதி உள்ளனர்.
இதனால் நேற்று இரவு முக்கூடல் அருகே உள்ள ரஸ்தாவூருக்கு 2 சிறுவர்களும் மதுபோதையில் சென்றுள்ளனர்.
சமீபகாலமாக ரஸ்தாவூரில் வசித்து வரும் சக்திகுமாரிடம் சென்று பேச வேண்டும் என்று கூறி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள குளத்துக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு வைத்து தங்களை போலீசில் எப்படி மாட்டிவிடலாம் என்று கூறி சக்திகுமாரை காலில் வெட்டியுள்ளனர். காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி வரவே அந்த நேரம் இரவு நேர ரோந்து காவலர்கள் அங்கு வந்துள்ளனர்.
தகவல் அறிந்து அவர்கள் 2 சிறுவர்களையும் பிடிக்க முயற்சிக்கவே, அரிவாளால் அவர்களை வெட்ட முயன்றுள்ளனர்.
இதனால் 2 போலீசாரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கவே, அதில் ரஞ்சித் என்ற காவலருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
தகவல் கிடைக்கப்பெற்று துப்பாக்கியுடன் பாப்பாக்குடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் முருகன் அங்கு விரைந்து சென்றார், 2 சிறுவர்களையும் பிடிக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயற்சிக்கவே, உதவி ஆய்வாளர் முருகன் அங்கிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
ஆனாலும் அந்த சிறுவர்கள் 2 பேரும் அந்த வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி திறக்க முயன்றனர்.
இதனால் அசாதாரண சூழல் அங்கு நிலவியதால் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் அந்த சிறுவர்களை நோக்கி உதவி ஆய்வாளர் முருகன் சுட்டார்.
அதில் ஒரு சிறுவனுக்கு நெஞ்சு பகுதி வழியாக குண்டு துளைத்து சென்றது. மற்றொரு சிறுவன் குண்டு அடி படாமல் தப்பித்து விட்டான்.
இந்த சம்பவங்கள் குறித்து அறிந்த கூடுதல் காவல் படையினர் அங்கு காயத்துடன் இருந்த சக்திகுமார், மார்பு பகுதியல் குண்டடி பட்ட சிறுவன், காயம் அடைந்த காவலர் ரஞ்சித் உள்ளிட்டோரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் குண்டு காயம் பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மீது பெட்ரோல் குண்டு வீசியது உள்பட 4 வழக்குகளும், தப்பி ஓடிய சிறுவன் மீது கொலை, பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.
இதையடுத்து தப்பி ஓடிய சிறுவனை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் இருக்கும் வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சக்தி குமார் என்பவரை அறிவாளால் வெட்டிய சம்பவத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட ஒன்பது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் காவலர்களை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை செய்ய முயற்சித்த வழக்கில் சம்பந்தப்பட்ட இளம் சிறார்கள் மீது, கொலை முயற்சி செய்யவிடாமல் தடுத்தல், ஆயுத பிரயோகம் உள்ளிட்ட 11 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாப்பாகுடி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர் கண்காணிப்பும் உயர் அதிகாரிகள் தலைமையில் நடந்து வருகிறது
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக 17 வயது மட்டுமே ஆன சிறுவன் என கூறப்பட்ட நிலையில் அவருடைய ஆவணங்கள் சரிபார்த்த போது அவருக்கு 18 வயது நிறைவடைந்தது தெரியவந்தது அதனை தொடர்ந்து 18 வயது நிறைந்த சண்முகசுந்தரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது