தமிழ்நாடு

காவலர்களுடன் வாக்குவாதம் -தடுப்பு வேலிகளை தலையால் முட்டி தள்ளிய இளைஞர்

காவலர்களுடன் வாக்குவாதம் -தடுப்பு வேலிகளை தலையால் முட்டி தள்ளிய இளைஞர்

webteam

தேனியில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை காவல்துறையினர் சோதனை செய்ததால் ஆத்திரமடைந்த அவர் தனது தலையால் தடுப்பு வேலிகளை முட்டியும் வாகனத்தை கீழே தள்ளியும் ஆத்திரத்துடன் நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி நகராட்சி பகுதி கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு நகரின் எல்லைகள் அனைத்தும் காவல் துறையினரால் சீல் வைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்குகாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் தேனி அருகே உள்ள லட்சுமி புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனியிலிருந்து லட்சுமிபுரம் செல்வதற்காக பொம்மைய கவுண்டன் பட்டி பகுதியிலுள்ள சோதனைச் சாவடியை கடக்க முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் அந்த இளைஞரிடம் எதற்காக தேனிக்கு சென்று வருகிறீர்கள் என்றும் வாகனத்தின் ஆவணங்களை காண்பிக்குமாறும் கூறியுள்ளனர்.


இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் வாகனத்தின் ஆவணங்களையெல்லாம் கொடுக்க முடியாது என்று கூறி தான் தலையில் அணிந்திருந்த தலைக்கவசத்தை சாலையில் தூக்கி எரிந்ததோடு மட்டுமல்லாமல் தனது வாகனத்தை காலால் உதைத்தார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் அங்கு இருந்த இரும்பு தடுப்பு வேலிகளை தனது தலையால் முட்டி அதனைக் கீழே தள்ளி தனது ஆத்திரத்தை ஆவேசமாக காவல்துறையினரிடம் காட்டினார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை அல்லிநகரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.