சென்னையை அடுத்த மேடவாக்கம் அருகே தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தெருக்கள், மற்றும் சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, சென்னை அடுத்த மேடவாக்கம் அருகே தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக ஈச்சங்காடு அண்ணா நகர் பகுதியில் உள்ள தரைப்பாலம் உடைந்தது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஈச்சங்காடு, கீழ்க்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பாலத்தை சீரமைக்கக்கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தற்போது இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.