தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்புகளையும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
உணவகங்கள், மளிகைக் கடைகள் நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் மளிகைக் கடைகள் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சந்தைகளில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் விசாலமான இடங்களில் கடைகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருட்களை வாங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வட்டியை வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மீறினால் குற்றவியல் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கால்நடை, கோழி, மீன், முட்டை உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்கு தடையில்லை எனவும் விவசாயம் தொடர்பான எந்த போக்குவரத்துக்கும் தடையில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்விக்கி உள்ளிட்ட ஆன் லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு தடை தொடர்கிறது. கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகளை மருத்துவமனைகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதேபோல், காசநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
அவசர உதவி தேவைப்படுவோர் 108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் 'அத்தியாவசிய சேவைக்காக' என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.