தமிழ்நாடு

நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்காலத்தடை... வழக்கு கடந்து வந்த பாதை

webteam

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

  • தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரத்தில் உள்ள அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
  • மத்திய அரசின் 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் ஆயிரத்து 500 கோடி ரூபாயை இதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
  • நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்திற்கு 2011 ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது.
  • இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் வழக்கு தொடர்ந்தார்.
  • 2015ம் ஆண்டு டிசம்பர் 16 ஆம்தேதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில், நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது.
  • தொடர் எதிர்ப்புகளை சந்தித்த நிலையில், தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. 2016 அக்டோபர் மாதம் நடந்த விசாரணையின்போது, நியூட்ரினோ திட்டம் தொடர்பான மத்திய அரசின் முடிவு குறித்து ஆய்வு நடத்த குழு அமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
  • 2017 மார்ச் மாதத்தில், நியூட்ரினோ ஆய்வகத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட குழுவை தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் பரிந்துரைத்தது. இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் மாசு கட்டுப்பாட்டுவாரியம் தெரிவித்தது.
  • அதே மாதத்தில், நியூட்ரினோ ஆய்வகத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை தற்காலிகமாக நிறுத்திவைத்து பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டது
  • இது தொடர்பான வழக்கில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு டாடா இன்ஸ்ட்டியூட் ஆப் ஃபன்டமென்ட்டல் ரிசர்ச்நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது.
  • இந்த அனுமதி குறித்து ஆட்சேபனை இருந்தால், 30 நாட்களுக்குள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என்றது சுற்றுச்சூழல் அமைச்சகம்
  • ஜூலை மாதத்தில், இந்த வழக்கில், மத்திய அரசு மற்றும் டாடா நிறுவனம் ஆகிய இரு தரப்பும் ஒருவாரத்தில் பதிலளிக்க அவகாசம் வழங்கி ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது தொடர்பாக விளக்கம் அளிக்க கடந்த அக்டோபர் மாதத்தில், மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
  • அதே மாதம் 5 ஆம்தேதி, நியூட்ரினோ திட்டம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசு, டாடா நிறுவனம் உள்ளிட்டவை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ராகவேந்திர ராத்தோர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு விவரம்: 

  • தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க  இடைக்காலத் தடை
  • சுற்றுச்சூழல்துறை அளித்த அனுமதிக்கு தடைவிதிக்க முடியாது
  • சுற்றுச்சூழல்துறை அளித்த அனுமதியில் தேசிய வன உயிரின வாரியத்தின் அனுமதியை பெறவேண்டும் 
  • தேசிய வன உயிரின வாரியம் அனுமதி அளித்தால் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும்
  • மத்திய அரசு மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்