தமிழ்நாடு

"கொரோனா டிஸ்சார்ஜ் விவரங்களை தெரிவியுங்கள்" - தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்

கலிலுல்லா

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களை டிஸ்சார்ஜ் செய்தால், அதுதொடர்பான தகவல்களை தங்களுக்கு அளிக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அனைத்து தனியார் மருத்துவமனைக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், மருத்துவமனை தனிமைப்படுத்துதலில் இருப்பதா, கொரோனா சிகிச்சை மையத்தில் இருப்பதா அல்லது வீட்டுத் தனிமையில் இருப்பதா என்பதை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மருத்துவர்கள் முடிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு 14 நாட்கள் மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னதாகவே அவரை வீட்டுத்தனிமைக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், சென்னை மாநகராட்சிக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வீட்டுத்தனிமையில் இருக்க கழிப்பறை வசதியுடன், நல்ல காற்றோட்டமுள்ள அறை இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவரது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகிளில் உள்ள மருத்துவர்கள் மூலம், வீட்டுத்தனிமை சான்றிதல் பெற்றுக்கொண்டு, மருத்துவமனை தனிமைப்படுத்துதலை சிலர் தவிர்க்கிறார்கள் என புகார்கள் எழுந்த நிலையில், சென்னை மாநகராட்சி கண்காணிப்பை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது.