தமிழ்நாடு

பேரன் இறப்பில் இருந்து மீள முடியாத பாட்டி எடுத்த விபரீத முடிவு

பேரன் இறப்பில் இருந்து மீள முடியாத பாட்டி எடுத்த விபரீத முடிவு

நிவேதா ஜெகராஜா

கன்னியாகுமரி மாவட்டத்தில், சொந்த வீட்டை விற்றும்கூட பேரன் உயிரை காப்பாற்ற முடியாத வேதனையில் பாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த தினவிளை பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜ் - ரோசம்மாள் தம்பதி. விவசாய கூலி வேலை செய்து வரும் இத்தம்பதி, தங்களுக்கு துணையாக மகள் வழி பேரனான ஜெகன் என்பவரை சிறு வயது முதலே வளர்த்து வந்துள்ளனர். வெளிநாட்டுக்கு சென்ற ஜெகன், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனையறிந்த பாட்டி ரோசம்மாள் மீண்டும் பணம் செலவளித்து பேரனை சொந்த ஊருக்கு அழைத்து வந்து மருத்துவம் பார்த்துள்ளார்.

பேரனின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆசையாய் கட்டிய வீட்டையும் விற்று மருத்துவம் பார்த்துள்ளார். எனினும் ஜெகன் சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரோசம்மாள் உணவு உண்ணாமல் துக்கத்திலே இருந்துள்ளார். இந்நிலையில்கடந்த 2ஆம் தேதி காலை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரை மீட்டு  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அப்பகுதியிலிருந்தோர் சேர்த்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.