தமிழ்நாடு

'உயிரோடு இருக்கும்போதே இறந்ததாக குடும்ப அட்டையில் பெயர் நீக்கம்'- ஆட்சியரிடம் மூதாட்டி மனு

Sinekadhara

உயிரோடு இருக்கும்போதே இறந்ததாக்கூறி, குடும்ப அட்டையில் பெயர் நீக்கப்பட்டதால் தூக்கம், சாப்பாடு இல்லாமல் கவலையடைந்த மூதாட்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கடுகு சந்தை சத்திரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மனைவி மாரியம்மாள்(66). மகாலிங்கம் இறந்துவிட்டார். மாரியம்மாளின் பெயரில் இருந்த குடும்ப அட்டையில் அவருடைய மகன் குடும்பத்தினரும் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன் மூதாட்டி மாரியம்மாள் இறந்துவிட்டதாக குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கப்பட்டுவிட்டது. அதனையடுத்து இவரது ஆதார் அட்டையும் முடக்கி வைக்கப்பட்டது. மேலும் இவரது பெயர் வேறு குடும்பத்தினரின் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ளதாக ரேஷன் கடை ஊழியர் கூறியுள்ளார்.

அதனையடுத்து கடலாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் விசாரித்தபோது மாரியம்மாள் இறந்துவிட்டதாக பதிவுசெய்து, ஆதார் அட்டையும் முடக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்து மாரியம்மாளின் பெயர் சேர்க்கப்படும் என கடந்த மார்ச் மாதத்தில் மாரியம்மாளளுக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக குடும்ப அட்டையில் பெயரை நீக்கிவிட்டனர் எனவும், தனது பெயரை சேர்க்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசனிடம் மனு அளித்தார்.

ஒரிரு நாளில் நடவடிக்கை எடுத்து மாரியம்மாளின் பெயர் அவரது குடும்ப அட்டையில் சேர்க்கப்படும் என மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதனிடம் அவர் உத்தரவிட்டார். உயிரோடு இருக்கும் மூதாட்டிஇறந்து விட்டதாகக் கூறி ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம் செய்ததால் மனமுடைந்த மூதாட்டி தூக்கம், சாப்பாடு இல்லாமல் தவித்துவருகிறார்.