தமிழ்நாடு

ரயிலில் தூங்கியதால் கேரளா சென்ற மூதாட்டி: 80 நாட்களுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

webteam

ரயிலில் மதுரை வந்த மூதாட்டி தூங்கியதால் கேரளா சென்றுள்ளார். ஊரடங்கில் மொழி தெரியாமல் அவதிப்பட்ட அவர் மதுரை ஆட்சியரின் முயற்சியால் 80 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் இணைந்தார்.

மதுரை ஆரப்பாளையம் பொண்ணகரம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி(70). இவர் கடந்த மார்ச் மாதம் 18-ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து ரயில் மூலம் மதுரை வந்துள்ளார். அப்போது ரயிலில் அவர் தூங்கிக்கொண்டு வந்ததால் மதுரை ரயில் நிலையத்தில் இறங்காமல் கேரள மாநிலம் கொல்லம் சென்றுள்ளார்.

இதையடுத்து ரயில் நிலையத்தில் இருந்த போலீசுக்கு மூதாட்டி பேசிய தமிழ் புரியாத காரணத்தால் அவரை மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று நினைத்து, கோழிக்கோடு மன நல மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர். செல்போன் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மூதாட்டி குடும்பத்தினர் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவும் அமலுக்கு வந்து விட்டது.

இந்த நிலையில் கஸ்தூரியின் மகள் பிரியா கடந்த 80 நாட்களாக தாயை காணாமல் தேடி அலைந்துள்ளார். கடைசியில் அவர் கேரளாவில், கோழிக்கோடு மன நல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பது தெரியவந்தது. தாயை மீட்க மகள் பிரியா பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் முடியாத நிலையில், நடந்த நிகழ்வுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயின் கவனத்திற்கு கொண்டு சென்று தாயை மீட்டுத்தர கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இதையடுத்து உடனடியாக கோழிக்கோடு மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மாவட்ட ஆட்சியர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். இதன் காரணமாக மூதாட்டி மன நல மருத்துவமனையில் இருப்பது உறுதியானது. தொடர்ந்து மூதாட்டி கஸ்தூரியை மீட்டு மதுரை அழைத்து வருவதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் ஏற்பாட்டில் மூதாட்டியை மீட்க பாஸ் கொடுத்ததோடு மதுரை ரெட்கிராஸ் அமைப்பிற்கும் உதவ உத்தரவிட்டார்.

மதுரை ரெட் கிராஸ் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார் ஆகியோர் இலவச வாகன வசதி செய்து கேரளாவிற்கு சென்று கோழிக்கோடு மனநல மருத்துவமனையில் இருந்த மூதாட்டி கஸ்தூரியை மீட்டு வந்து மதுரை ஆட்சியர் வினயிடம் ஒப்படைத்தனர். பின்னர் மூதாட்டிக்கு 'கொரோனா பரிசோதனை மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.