தமிழ்நாடு

கொசுவை விரட்ட புகைமூட்டம்: பற்றிய தீயில் ஆடுகளுடன் மூதாட்டியும் உயிரிழப்பு

கொசுவை விரட்ட புகைமூட்டம்: பற்றிய தீயில் ஆடுகளுடன் மூதாட்டியும் உயிரிழப்பு

webteam

வேதாரண்யம் அருகே ஆட்டுக்கொட்டகையில் கொசுவை விரட்ட புகைமூட்டம் போட்டதில் கொட்டகை தீப்பிடித்து எரிந்து மூதாட்டி உயிரிழந்தார். மேலும் கொட்டகையில் கட்டியிருந்த 15 ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அண்டர்காடு வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சம்மாள்(78). இவர் 15 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், இவர் இன்று மாலை வீட்டுக்கு அருகில் உள்ள ஆட்டு கொட்டகையில் ஆடுகளை கட்டிவிட்டு கொசுவை விரட்ட புகை மூட்டம் போட்டுள்ளார். 

அப்போது, எதிர்பாராத விதமாக புகை மூட்டத்திலிருந்து தீ பரவி ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதில் ஆட்டுக் கொட்டகைக்குள் இருந்த மூதாட்டி அஞ்சம்மாள் தீயில் கருகி உயிரிழந்தார். மேலும், ஆட்டுக் கொட்டகையில் கட்டியிருந்த 15 ஆடுகளும் தீயில் கருகி இறந்தன. 

இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.