தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள்

ஜா. ஜாக்சன் சிங்

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, இன்று சிறப்பு கிராமசபைக் கூட்டங்களை நடத்துமாறு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும், உறுதிமொழி எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமின்றி, சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டதற்கான விவரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் உள்ளீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இன்று நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்துமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

அப்போது, வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்கள் மட்டுமின்றி தண்ணீர் தினம் மற்றும் உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களிலும் இனி கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.